நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை நடத்திய இன்றைய விசாரணை நிறைவடைந்தது.
நேஷ்னல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையினர் தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக சோனியா காந்தி ஆஜரானார். பெண் அதிகாரிகள் தலைமையிலான ஐந்து அதிகாரிகள் கொண்ட குழு சோனியா காந்தியிடம் விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணை பகல் 12.30 மணிக்கு தொடங்கிய நிலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
நேஷ்னல் ஹெரால்டு பங்குகள் விற்கப்பட்டதில் முறைகேடுகள் இருப்பதாகச் சொல்லப்படக் கூடிய சூழலில், அவை குறித்த விவரங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையின் அதிகாரிகள் எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. சோனியா காந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து தனது இல்லத்திற்கு புறப்பட்டார்.
இந்த நிலையில், வரும் ஜூலை 25- ஆம் தேதி அன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் கூறுகின்றன.
இதனிடையே, சோனியா காந்திக்கு எதிரான அமலாக்கத்துறையின் நடவ்டிக்கையைக் கண்டித்து, டெல்லியில் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் மற்றும் சோனியா காந்தியின் இல்லம், அமலாக்கத்துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.