மத்திய அரசு, தலைநகர் டெல்லியில் 'சென்ட்ரல் விஸ்டா' என்ற திட்டத்தை செயல்படுத்திவருகிறது. இந்த திட்டத்தின் கீழ், புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கும் பணிகள் நடந்துவருகிறது. மேலும், மத்திய அமைச்சர்களுக்கான அலுவலகங்கள், பொது செயலகங்கள், பிரதமர் இல்லம், குடியரசுத் துணைத் தலைவருக்கான இல்லம் ஆகியவை அமைக்கும் பணிகளும் நடந்துவருகின்றன.
இந்தநிலையில், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு அலுவலக வளாகங்களைப் பிரதமர் மோடி இன்று (16.09.2021) திறந்துவைத்தார். மேலும், சென்ட்ரல் விஸ்டாவிற்கான இணையதளத்தையும் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்றக் கட்டடம் முன்னர் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கட்டி முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
விழாவில் பிரதமர் மோடி பேசியது வருமாறு:
“இன்று டெல்லி 'புதிய இந்தியா' பார்வைக்கு ஏற்ப முன்னேறிவருகிறது. இந்தப் புதிய பாதுகாப்பு அலுவலக வளாகங்கள், அனைத்து நவீன வசதிகளுடன் சிறந்த பணிச் சூழலில் நமது படைகள் செயல்படுவதை சாத்தியமாக்கும். சென்ட்ரல் விஸ்டாவை விமர்சிப்பவர்கள், புதிய பாதுகாப்பு அலுவலக வளாகங்கள் குறித்து பேசமாட்டார்கள். தங்களது பொய் வெளிப்பட்டுவிடும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள், ஏற்கனவே விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கட்டி முடிக்கப்படும். 24 மாதங்களில் முடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு அலுவலக வளாகத்தின் பணிகள், 12 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது. இதுவொரு சாதனை. இந்த திட்டத்தின் மூலமாக கரோனா காலத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.”
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.