
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசால் நவீன தரத்தில் மேம்படுத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு ஆய்வகங்களில் ஜூலை 6 மற்றும் 12ஆம் தேதிகளில் தயாரித்த நான்கு லட்டு நெய் மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் அடிப்படையில், லட்டுக்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது உண்மைதான் எனத் திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் தெரிவித்திருந்தார்.
இத்தகைய பரபரப்பான சூழலில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நெய் விநியோகித்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் சார்பில் நேற்று (25.09.2024) போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. தேவஸ்தானத்தின் நெய் கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளி கிருஷ்ணா திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், “திருப்பதி கோயிலுக்கு விநியோகித்த நெய்யில் நிபந்தனைகளை மீறி கலப்படம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 4 டேங்கர் லாரிகளில் நெய் விநியோகம் செய்யப்பட்டதில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது” எனப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பதி கோயிலுக்கு நெய் அனுப்பிய பால் நிறுவனத்தின் மீது 9 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை எனத் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கமளித்திருந்தது. இது தொடர்பாக நிறுவனத்தின் சார்பில் அதிகாரிகள் அளித்த விளக்கத்தில், “உணவுப் பாதுகாப்புத் துறையிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, திருப்பதி தேவஸ்தான ஆய்வகத்துக்கு ஏற்கனவே மாதிரிகள் அனுப்பியுள்ளோம். இது தொடர்பாக அங்குள்ள ஆய்வகம் சோதனைகளை நடத்தியது. இதில் எவ்வித முறைகேடுகள் இல்லை எனத் தெரியவந்தது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அனுப்பப்பட்ட நெய்யில் குறைபாடுகள் இருப்பதாக வதந்தி பரவியது. ஆனால் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் அக்மார்க் அதிகாரிகள் பார்வையிட்டு, மாதிரிகள் சேகரித்து, எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் நெய் தூய்மையானது எனத் தெரிவித்தனர்.
எங்களிடம் அதற்கான மாதிரிகள் உள்ளன. யார் வேண்டுமானாலும் அவர்கள் விரும்பும் எந்த ஆய்வகத்திலும் சோதனைகளை நடத்த அழைக்கிறோம். ஏ.ஆர். நிறுவனத்தின் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குத் தொடர்ந்து பால் உணவுகள் மற்றும் நெய்யை ஜூன், ஜூலை மாதத்தில் சப்ளை செய்தோம். ஆனால், தற்போது திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு நெய் வழங்குவதில்லை. நெய் தயாரிப்பில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள எங்களுக்கு இதுநாள் வரை எந்த புகாரும், பிரச்சனையும் வரவில்லை” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.