இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, ''பத்தாண்டுகளில் நாடு மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. அதையே குடியரசுத் தலைவரின் உரை பிரதிபலித்துள்ளது. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய நான்கு சக்திகளை பற்றி பேச உள்ளோம். தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. ஆட்சிக்கு வர அவர்களுக்கு வாய்ப்பு இல்லை.
நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்துங்கள். காங்கிரசின் செயல்பாடுகளால் அக்கட்சிக்கும், பிற கட்சிகளுக்கும், நாட்டிற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் திறமையை காங்கிரஸ் வீணடிக்கிறது. சிறுபான்மையினர் என சமூகத்தை எதிர்க்கட்சிகள் பிளவுபடுத்துகின்றனர். ஒரு முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும் மீண்டும் முயற்சிப்பதால் காங்கிரசை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
குடும்ப அரசியல் செய்வதால் மக்களின் பிரச்சனைகள் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவதில்லை. வந்தே பாரத், புதிய நாடாளுமன்ற கட்டடம், மேக் இன் இந்தியா உள்ளிட்டவை நாட்டின் சாதனைகள். அரசின் அத்தனை நடவடிக்கைகளையும் எதிர்ப்பது காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக இருக்கிறது. உலகின் நலனுக்கு இந்தியா பாடுபடுகிறது என்பதை ஜி-20 மாநாட்டின் மூலம் புரிந்து கொண்டார்கள். விரைவில் இந்தியா மூன்றாவது பொருளாதார நாடாக மாறும் என்பது என்னுடைய உறுதி'' என்றார்.