தேனியில் நிறுவப்பட இருக்கும் நியூட்ரினோ ஆய்வக திட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், நியூட்ரினோ திட்டத்தைக் கைவிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 14/03/2022 அன்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தில், "தேனி பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுற்றுச்சூழல், வனவிலங்குகள் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும். நியூட்ரினோ திட்டத்துக்காக சக்தி வாய்ந்த குண்டுகள் மூலம் பாறைகளைத் தகர்ப்பது பேரழிவை ஏற்படுத்தும். நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புலிகள் காப்பகம் மட்டுமின்றி மேற்குத்தொடர்ச்சி மலையில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இதே நிலைப்பாட்டை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.திருச்சி சிவா பேசினார். ''சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மலைக்கு அடியில் சுரங்கம் தோண்டுவதால் அப்பகுதிகளில் பாறையில் வெடிப்பை ஏற்படுத்தும். இதனால் அப்பகுதி மக்களின் நீராதாரம் பாதிக்கப்படும்'' என பேசினார்.