டிக்டாக் செயலியை இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றப்போவதாக உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் பைட்டன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலி உலகப்புகழ் பெற்றது. உலக அளவில் மொத்தம் 800 மில்லியன் பயனாளர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் மக்கள் டிக்டாக் பயனாளர்களாக உள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக பயனாளர்கள் இருந்ததால் இந்தியாவில் இதன் மொத்த சந்தை மதிப்பு 3 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன இராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இதனால் டிக்டாக் செயலி மூலம் பைட்டன்ஸ் நிறுவனத்திற்கு கிடைக்கும் வருவாய் வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில் இந்த செயலியை இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனத்திடம் கைமாற்றி விட பைட்டன்ஸ் நிறுவனம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கடந்த மாதத்தின் இறுதியில் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. மொத்தமாக ரிலையன்ஸ் நிறுவனம் டிக்டாக்கை கைப்பற்றுமா அல்லது இந்தியாவில் மட்டும் பெருந்தொகையை முதலீடு செய்யுமா அல்லது இந்த முயற்சி முடிவு எட்டப்படாமலே கைவிடப்படுமா என்பது போன்ற தகவல்கள் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கலாம்.