கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா இராஜினாமா செய்வார் என நீண்டநாட்களாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் இன்று (26.07.2021) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமாவிற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய எடியூரப்பா, தன்னை இராஜினாமா செய்யும்படி யாரும் நிர்பந்திக்கவில்லையென்றும், தானாகவே இராஜினாமா செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தான் ஆளுநராக நியமிக்கப்படப் போவதாக வெளியான தகவல்களையும் எடியூரப்பா மறுத்துள்ளார்.
இராஜினாமா செய்த எடியூரப்பாவை கர்நாடக ஆளுநர், புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் வரை காபந்து முதல்வராக பொறுப்பு வகிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தச் சூழலில் மத்திய உள்துறை அமைசர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும், இதில் கர்நாடக முதல்வராக வாய்ப்புள்ளவராக கருதப்படும் மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியும் கலந்துகொண்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.