சீனாவை பிறப்பிடமாக கொண்ட டிக்டாக செயலி உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. இளைஞர்கள் பலர் தங்களது நடிப்பு திறமையை உலகிற்கு காட்டுவதற்காக பிரபல சினிமா வசனங்கள் மற்றும் பாடல்களுக்கு நடித்து தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லியில் அலுவலகங்களை கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்திற்கு உலக அளவில் 50 அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா, ஹிந்தி உட்பட 11 மொழிகளிலும், சர்வதேச அளவில் 150 மொழிகளிலும் இந்த செயலி இயக்குகிறது. இப்படிப்பட்ட இந்த செயலியால் பலர் தங்களது வாழ்வில் புகழின் உச்சிக்கும் சென்றுள்ளனர். பலரது வீடியோக்கள் இதில் வைரலானதை அடுத்து அவர்களுக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்துள்ளன.
அந்த வகையில் தற்போது டிக் டாக்கில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலியை போல உருவ ஒற்றுமை கொண்ட இளைஞர் கவுரவ் அரோராவின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி போலவே கவுரவ் அரோரா நடிக்கும் காட்சிகள் தற்போது பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது. இவரது வீடியோக்களை சினிமா பிரபலங்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாலிவுட்டில் விரைவில் வெளியாகவிருக்கும் 'தி சோயா பேக்டரி' என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.