நாடு முழுவதும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதும், கரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பலருக்கு கரோனா தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஆயிரக் கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மாநாடும், அதில் கலந்து கொண்டவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதும் தற்செயலான நிகழ்வாகும். இதற்கு மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கும் முக்கிய காரணமாக இருக்கிறதெனினும், நாடெங்கிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் பரப்பப்பட்டது.
குறிப்பாக, கரோனா ஜிகாத் என்ற பெயரில், இஸ்லாமியர்கள்தான் கரோனாவைப் பரப்புகிறார்கள் என்று சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது சாமான்ய மக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்பாடுகளும் அரங்கேறி இருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலம், ஹல்தவானி பகுதியில், இருசக்கர வாகனத்தில் வரும் சிலர், சாலையோரத்தில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்பவர்களின் பெயரைக் கேட்கிறார்கள். அவர் இந்துவா முஸ்லீமா என்பது அதில் தெரிந்துவிடும். ஒருவேளை இஸ்லாமியராக இருந்தால், உடனடியாக கடையை மூடிவிட்டு கிளம்பச் சொல்கிறார்கள். இந்துவாக இருந்தால், ஆதார் அட்டையைக் காட்டச் சொல்லி மிரட்டுகிறார்கள். அதில் உறுதிசெய்த பிறகே அனுமதிக்கிறார்கள். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
“தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை தாமாக முன்வந்து தனிமைப்படுத்திக்கொள்ளவும், சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் அரசு அறிவுறுத்தி வருகிறது. பலரும் சிகிச்சையில் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில், ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுமே கரோனா வைரஸைப் பரப்புகிறார்கள்” என்ற கருத்து எங்கிருந்து வந்ததென்பது தெரியவில்லை என்று புலம்புகிறார் சாலையோரத்தில் கடை நடத்தும் வியாபாரி ஒருவர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரைக் கைதுசெய்துள்ளதாக ஹல்தியானி காவல்துறை தெரிவித்துள்ளது.
கரோனா என்கிற கொடிய நோய்க்கு அஞ்சி வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள் மக்கள். உடலளவில் இடைவெளி விட்டு, உள்ளத்தளவில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய இந்த சூழலில், மதவெறி என்கிற மனநோய் சிலரை ஆட்டிப் படைப்பது வேதனை அளிக்கிறது.