மழை பொழியாத காரணத்தால் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என விவசாயி ஒருவர் கடவுள் இந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் கூண்டா மாவட்டத்தில் உள்ள ஜாலா எனும் கிராமத்தைச் சேர்ந்த சுபித்குமார் யாதவ் என்ற முதியவர் கடந்த 16 ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், தனது கிராமத்தில் கடந்த பல மாதங்களாக மழையே பொழியவில்லை. இதனால் என்னால் விவசாயம் செய்ய முடியவில்லை. நான் மட்டுமல்ல எங்கள் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணமான கடவுள் இந்திரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். இதில் கொடுமை என்னவென்றால் இந்த மனுவைப் பெற்ற தாசில்தார் அந்த மனுவைப் படிக்காமலேயே மேல் நடவடிக்கைக்காக மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார் என்பதுதான்.