பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் பஞ்சாபில் சாலை வழியாக பயணம் செய்தபோது, போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். பிரதமர் சென்ற கார் மறிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
அதேநேரத்தில் பிரதமரின் காருக்கு அருகே சென்றது பாஜக ஆதரவாளர்கள்தான் என கூறி, அதற்கு ஆதாரமாக பிரதமர் கார் மறிக்கப்பட்டது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்ட போராட்டங்களை முன்னின்று நடத்திய விவசாய சங்க கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா, பிரதமரின் வாகனம் மறிக்கப்பட்டது தொடர்பாக விளக்கமளித்துள்ளதோடு, பிரதமரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது என கூறப்படுவது முற்றிலும் இட்டுக்கட்டப்பட்டது போல் இருப்பதாக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக சம்யுக்த கிசான் மோர்ச்சா கூறியுள்ளதாவது; பிரதமர் மோடி ஜனவரி 5-ம் தேதி பஞ்சாப் வருகிறார் என்ற செய்தி கிடைத்ததும், சம்யுக்தா கிசான் மோர்ச்சாவைச் சேர்ந்த 10 விவசாய அமைப்புகள் (மத்திய இணையமைச்சர்) அஜய் மிஸ்ரா தேனியைக் கைது செய்யக் கோரியும், நிலுவையிலுள்ள பிற கோரிக்கைளை வலியுறுத்தியும் அடையாள போராட்டத்தை அறிவித்தன.
போராட்டம் நடத்த ஃபெரோஸ்பூர் மாவட்ட தலைமையகத்திற்குச் செல்ல விடாமல் சில விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் பல இடங்களில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பிரதமரின் கான்வாய் வந்து பின்னர் திரும்பி சென்ற மேம்பாலத்திலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமரின் கான்வாய் அந்த வழியாகச் செல்லப்போகிறது என்பது குறித்த உறுதியான தகவல் அங்குள்ள விவசாயிகளிடம் இல்லை.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பிரதமரின் வாகனத்தை நோக்கிச் செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது சம்பவம் தொடர்பான வீடியோவில் இருந்து தெளிவாகிறது. பாஜக கொடியுடன் "நரேந்திர மோடி ஜிந்தாபாத்" என கோஷம் எழுப்பிய ஒரு குழு மட்டுமே அந்த (பிரதமருடைய) கான்வாய் அருகே சென்றது. எனவே, பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்பது முற்றிலும் இட்டுக்கட்டப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. இவ்வாறு சம்யுக்த கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.