Skip to main content

விலங்கு கொழுப்பு சர்ச்சை; பிரதமரை சந்திக்கும்போதெல்லாம் லட்டு கொடுத்திருக்கிறார் ஜெகன்?

Published on 21/09/2024 | Edited on 21/09/2024
thirupathi laddu affair

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதனை தொடர்ந்து, அரசால் நவீன தரத்தில் மேம்படுத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு ஆய்வகங்களில் ஜூலை 6 மற்றும் 12ம் தேதிகளில் தயாரித்த நான்கு லட்டு நெய் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் அடிப்படையில், லட்டுக்களை தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது உண்மைதான் என திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் தெரிவித்திருந்தார். திருப்பதி லட்டு விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையான நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா, ஆந்திரப் பிரதேச அரசிடம் இது குறித்து விரிவான அறிக்கையை கேட்டுள்ளார். மேலும், அந்த அறிக்கையின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். 

இந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக, திருப்பதியில் இருந்து 1 லட்சத்திற்கும் அதிகமான லட்டுகள் அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, அயோத்தி கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறிவுள்ளதாவது, “திருப்பது லட்டு பிரசாதத்தில் விலங்குக் கொழுப்பு கலந்திருந்தால், அது மன்னிக்க முடியாதது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வைணவர்கள், உணவில் பூண்டு, வெங்காயம் கூட பயன்படுத்துவதில்லை. இத்தகைய சூழலில், பிரசாதங்களில் விலங்குக் கொழுப்பைப் பயன்படுத்துவது மிகவும் வருந்தத்தக்கது. இது இந்து மத நம்பிக்கையை கேலிக்கூத்தாக்கும் செயல். இதை உயர்மட்ட விசாரணை குழு விசாரித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி, திருப்பதி லட்டுகளை பரிசாக அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 -2014ஆம் ஆண்டு வரையில், ஆந்திரப் பிரதேசத்தில் அப்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லிக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடிக்கு, திருப்பதி கோவிலில் இருந்து லட்டுகளை பரிசாக அளித்துள்ளதாக  கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்