முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வளத் துறை ஆணைய செயற்பொறியாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.
தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது. இந்நிலையில் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் குறித்து மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஸ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வில் தமிழக பிரதிநிதிகளாகத் தமிழக நீர்வளத் துறை செயலாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாகக் கேரள நீர்ப்பாசன செயற்பொறியாளர் அணில் குமார், உதவி செயற் பொறியாளர் அருண் குமார் ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுவினர் தேக்கடியில் இருந்து படகு மூலம் சென்று பிரதான அணை, பேபி அணை, மதகுப் பகுதியைப் பார்வையிட்டுப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். இதன் அறிக்கை மத்திய நீர்வள தலைமைக் கண்காணிப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.