மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆறு மாதங்களுக்கு மேலாக அவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில், விவசாய சங்கத்தலைவர் ராகேஷ் திகைத், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து வேளாண் போராட்டங்கள் குறித்தும், மேற்குவங்க விவசாயிகள் விவசாயிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
இதன்பிறகு இருவரும் ஒன்றிணைந்து பேட்டியளித்தனர். அப்போது ராகேஷ் திகைத், "விவசாயிகளின் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக முதல்வர் எங்களுக்கு உறுதியளித்தார். இந்த உத்தரவாதத்திற்காக நாங்கள் அவருக்கு நன்றி கூறுகிறோம். மேற்கு வங்கம் ஒரு முன்மாதிரி மாநிலமாகச் செயல்பட வேண்டும். விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை வழங்க வேண்டும்" எனக் கூறினார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பேசுகையில், "தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மருந்துகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. கடந்த 7 மாதங்களாக, அவர்கள் (மத்திய அரசு) விவசாயிகளுடன் பேசுவது குறித்துக் கவலைப்படவில்லை. மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனக் கூறினார்.
தொடர்ந்து அவர், "மாநிலங்களை ஒடுக்குவது கூட்டாட்சி கட்டமைப்பிற்கு நல்லதல்ல. நமது ஜனநாயகத்தைக் காப்பாற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய நான் கேட்டுக்கொள்கிறேன். கூட்டாட்சி கட்டமைப்பில், எந்தவொரு மாநிலமும் துன்புறுத்தப்பட்டால், மற்ற மாநிலங்களும் இணைந்து போராடும் வகையில் இயல்பான மாநில அரசாங்கங்களின் கூட்டமைப்பு இருக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார்.