Skip to main content

அமைகிறதா மூன்றாவது அணி...? தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் மம்தாவின் பதில்!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

mamata

 

2024ஆம் ஆண்டு தேர்தலில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளை காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முன்னெடுத்தன. இதன்தொடர்ச்சியாக மம்தா, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்தார்.

 

இதனால் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றாக இணைந்து வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களைத் தங்கள் பக்கம் இழுத்தது. இதனால் இரு கட்சிகளுக்குமிடையே மோதல் வெடித்தது. இதனால் இரு கட்சிகளும் தேர்தலை ஒன்றுசேர்ந்து சந்திக்குமா என கேள்வியெழுந்தது.

 

இந்தநிலையில், மும்பைக்குப் பயணம் மேற்கொண்ட மம்தா, உத்தவ் தாக்கரேவுக்கு உடல்நலம் சரியில்லாததால், அவரது மகனும் அமைச்சருமான ஆதித்ய தாக்ரேவையும் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத்தொடர்ந்து இன்று (01.12.2021) தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து மம்தா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து மம்தா, சரத் பவார் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சரத் பவார், "இன்றைய சூழ்நிலையில் ஒத்த எண்ணம் கொண்ட சக்திகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து கூட்டுத் தலைமையை அமைக்க வேண்டும் என்பதே மம்தாவின் எண்ணம். தலைமைக்கு வலுவான மாற்றை நாம் வழங்க வேண்டும். நமது சிந்தனை இன்றைக்கானது அல்ல. தேர்தலுக்கானது" என தெரிவித்தார்.

 

அதேபோல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மம்தா, "நடந்துகொண்டிருக்கும் பாசிசத்திற்கு எதிராக யாரும் போராடவில்லை. எனவே வலிமையான மாற்றுப்போக்கை உருவாக்க வேண்டும். சரத் பவார் மூத்த தலைவர். அவர் சொன்னதை நான் ஏற்றுக்கொள்கிறேன். என்ன ஐக்கிய முற்போக்கு கூட்டணி? ஐக்கிய முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை" என கூறியுள்ளார்.

 

அதேநேரத்தில், திரிணாமூல் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸும் பங்குபெறுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த சரத் பவார், காங்கிரஸாக இருந்தாலும் சரி, வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, பாஜகவுக்கு எதிரானவர்கள் ஒன்றுசேர்ந்தால் வரவேற்கப்படுவார்கள்" என கூறியுள்ளார்.

 

அண்மைக்காலமாக காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் ஆகிய கட்சிகள் ஒருவரை ஒருவர் விமர்சித்துவரும் நிலையில், மம்தாவின் பதில் மூன்றாவது அணி உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்