இந்தியாவில் கரோனா வைரஸ் இன்னும் சமூகப்பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸால் இதுவரை 7,67,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 21,129 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,76,377 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவின் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவில் இந்தப் பரவல் இன்னும் சமூகப்பரவலாக மாறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது நாடு இந்தியா என்று நாம் தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். ஆனால் இதைச் சரியான கண்ணோட்டத்தில் பார்ப்பது அவசியம். நாம் உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. 10 லட்சம் பேருக்கு நமது நாட்டில் 538 பேர் தான் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இதன் உலக சராசரி 1,453 பேர் ஆகும். இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவ வல்லுநர்கள் இந்தியாவில் சமூகப் பரிமாற்றம் இல்லை என்று கூறினர். சில இடங்களில் பரவல் அதிகமாக இருக்கலாம், ஆனால் ஒரு நாடாக நாம் இன்னும் சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.