உத்தரப்பிரதேசத்தில் அரசியல் கொலைகள் பெருகி வருகிறது:
மாயாவதி குற்றச்சாட்டு
இதுதொடர்பாக, மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் முன்னர் ஆட்சி செய்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகரான ராஜேஷ் யாதவ் என்பவர் அலகாபாத் பல்கலைக்கழகம் அருகே நேற்று காலை மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலைக்கு மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் அரசியல் கொலைகள் என்னும் புதிய பாணியில் பெருகி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் அரசின் ஒத்துழைப்புடன் மதவாத சக்திகளும், சாதி அமைப்புகளும் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதன் விளைவாக சாதி, வகுப்புவாதம் மற்றும் அரசியல்ரீதியான பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த பதற்றங்கள் ஒருபுறமிருக்க, அரசியல்சார்ந்த படுகொலைகள் என்ற புதிய பாணி தொடங்கியுள்ளது. இதன் விளைவாக அலகாபாத்தில் நேற்று ராஜேஷ் யாதவ் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். அரசியல் கொலைகள் மட்டுமின்றி, பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தசரா, முஹர்ரம் விழாக்களின்போது பல வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன. இவை எல்லாம் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான அரசு தோல்வி அடைந்து விட்டதை சுட்டிக் காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கொல்லப்பட்ட ராஜேஷ் யாதவ், சமீபத்தில் நடைபெற்ற உ.பி. சட்டசபை தேர்தலில் கியான்பூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார், இவ்வாறு தெரிவித்துளார்.