மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்தது. மேலும், வேளாண் சட்டங்கள் தொடர்பாக முடிவினை எட்ட குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, "தடை செய்யப்பட்ட இயக்கம், இந்த (விவசாயிகளின்) போராட்டத்திற்கு உதவுவதாக எங்கள் முன் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் ஏற்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா" என மத்திய அரசுத் தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மத்திய அரசுத் தரப்பு, போராட்டத்தில் காலிஸ்தானிகள் ஊடுருவியுள்ளதாக நாங்கள் கூறியுள்ளோம் எனத் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி "தடைசெய்யப்பட்ட அமைப்பால் ஊடுருவல் நிகழ்ந்திருப்பதாக ஒருவர் எங்களிடம் குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்றால், நீங்கள் அதை உறுதிப்படுத்த வேண்டும். நாளைக்குள் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுங்கள்" என உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசுத் தரப்பின் வழக்கறிஞர், "இது தொடர்பாக நாங்கள் பிரமாணப் பத்திரத்தையும், உளவுத்துறையின் அறிக்கையையும் தாக்கல் செய்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.