புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய இளைஞர் தின விழா வரும் 12-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து 2,500 இளைஞர்கள் பங்கேற்கின்றனர். அதனை முன்னிட்டு நிகழ்வு நடைபெறும் இடத்தை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து தனியார் ஹோட்டலில் நடந்த விழாவில் தேசிய இளையோர் தின விழாவுக்கான லோகோ மற்றும் விழா தூதுவரான புதுச்சேரி மாநில விலங்கான அணில் கார்ட்டூன் படம் ஆகியவற்றை மத்திய அமைச்சர் முன்னிலையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், கல்வியமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசுகையில், "தேசிய இளைஞர் தின விழாவானது ‘திறன்மிகு இளைஞர்கள் - ஆற்றல் மிகு இளைஞர்கள்’ என்ற மைய கருத்தின் அடிப்படையில் நடைபெறும். அரவிந்தர், பாரதி, விவேகானந்தர் ஆகியோர் இளையோருக்கான முன்மாதிரிகள். பாரம்பரியத்தை இளையோருக்கு முன்னிறுத்த இந்த நிகழ்வை நடத்துகிறோம். பிரதமர் மோடி இந்நிகழ்வை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இந்த திருவிழாவை புதுச்சேரியில் நடத்துவதற்கு பிரதமர் விரும்பினார். அவர் நிகழ்வை தொடங்கி வைப்பதுடன் இளையோரிடம் கலந்துரையாடுகிறார். தேசிய இளையோர் தின விழாவுக்கு நாடு முழுவதும் இருந்து இளையோர்கள் வருவதால் புதுச்சேரியின் தனித்திறனை, தனித்தன்மையை வெளிப்படுத்த இந்நிகழ்வு உதவும். இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களின் உரைகள் இந்த நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன" என்றார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், "கடந்த சில ஆண்டுகளில் வேலை வாய்ப்புகளை அதிகரித்துள்ளோம். புதிய நிறுவனங்களை தொடங்குவோர், சுய தொழில் புரிவோர், வங்கி சார்ந்த துறைகள், தொழில் முனைவோர் அதிகரித்துள்ளனர். வேலை கேட்போரை விட வேலை தருவோர் அதிகரித்துள்ளனர். வானொலி சேவையை நாங்கள் முடக்கவில்லை, விரிவுபடுத்த செய்கிறோம். பிரதமர் உரையாற்றும் 'மான் கி பாத்' நிகழ்ச்சியை கேட்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது தொலைபேசியில் கேட்கும் வகையில் தொழில்நுட்ப ரீதியாக பலப்படுத்தியுள்ளோம். இந்திய விளையாட்டு ஆணையத்தில் பெறப்பட்ட பாலியல் புகார் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் படி நடவடிக்கை எடுக்கிறோம்" என்று தெரிவித்தார்.