இந்தியாவில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், நாடு முழுவதும் 96 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்த வாக்காளர்களில் முதல் தலைமுறை வாக்காளர்களான 18 வயது முதல் 19 வரை உள்ளவர்கள் 1.73 கோடி பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 96 கோடி பேரில் 47 கோடி பேர் பெண் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலின் போது இந்தியாவின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 91.20 கோடியாக இருந்த நிலையில், இந்தத் தேர்தலில் 96 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.