சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து, ஈரான், அமெரிக்கா என பல உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ள சூழலில், உலக நாடுகள் பலவும் இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இறைச்சிகள் மூலம் கரோனா பரவுவதாக தகவல்கள் பரவின. குறிப்பாக, கோழிக்கறி சாப்பிடுவதன் மூலம் கரோனா பரவும் என தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பல பகுதிகளிலும் வதந்திகள் பரவின. இதன் காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் எழுந்தது. எனவே, மக்கள் அச்சத்தை போக்கும் வகையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பொது மக்கள் முன்னிலையில் அம்மாநில அமைச்சர்கள் சிக்கன் சாப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதேபோல நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கும் சிக்கன் வழங்கப்பட்டது. மேலும், சிக்கன் சாப்பிடுவதால் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்பது வெறும் வதந்தி என்றும், அதில் துளியும் உண்மை இல்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.