வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்று ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, எம்ஐஎம் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ், தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இதர கட்சிகள் ஒரு அணியாகவும் களத்தில் உள்ளன. பாஜகவும் களத்தில் உள்ளது. இந்த அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜெகத்தியாலா மாவட்டம், கொரட்டாலா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக ஆக்குல அனுமந்தலு என்பவர் போட்டியிடுகிறார். இவர் நேற்று மெடுபல்லி நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தன்னுடைய தன்னுடைய ஆதரவாளர் ஒருவரிடம் பெட்டி நிறைய செருப்புகள், மற்றும் ராஜினாம கடிதத்தை கொடுத்தார். எடுத்து வந்த இப்பொருட்களை வீடு வீடக கொடுத்தார். நான் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின், மக்களுக்கு சேவை செய்ய தவறினால் இப்போது கொடுக்கும் இந்த செருப்பால் என்னை அடியுங்கள், நான் கொடுத்த ராஜினாமா கடிதத்தை வைத்து எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யுங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார். இவரின் இந்த பிரச்சாரம் அந்த தொகுதி மக்களிடம் பரபரப்பாக பேசப்படுகிறது.