மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம், இன்றுடன் 17 ஆவது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால், விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், 'சன்யுக்தா கிசான் அந்தோலன்' என்ற விவசாய அமைப்பினர், வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிரான விவசாயிகளின் இயக்கத்தை மத்திய அரசு பிளக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கூறி, உண்ணாவிரதப் போராட்டத்திலும், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபடப் போவதாகவும் அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, சன்யுக்தா கிசான் அந்தோலன் அமைப்பினர், "டிசம்பர் 14 ஆம் தேதி, அனைத்து விவசாய சங்கத் தலைவர்களும் சிங்கு எல்லையில், ஒரே மேடையில் அமர்ந்து உண்ணாவிரதம் இருப்பார்கள். மூன்று விவசாய மசோதாக்களையும் அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், நாங்கள் திருத்தங்களுக்கு ஆதரவாக இல்லை. மத்திய அரசு எங்கள் விவசாயச் சட்டங்களுக்கு எதிரான இயக்கத்தை தடுக்க விரும்புகிறது, ஆனால், நாங்கள் அதை அமைதியாகத் தொடருவோம். எங்கள் இயக்கத்தை தோல்வியடையச் செய்ய மத்திய அரசு எடுக்கும் எந்த முயற்சியையும் நாங்கள் முறியடிப்போம். எங்களைப் பிளவுபடுத்துவதற்கும், எங்கள் இயக்கத்தின் மக்களைத் தூண்டுவதற்கும் அரசாங்கம் சில முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், நாங்கள் இந்த இயக்கத்தை வெற்றியை நோக்கி அமைதியாக எடுத்துச் செல்வோம்" எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் "ராஜஸ்தானின் ஷாஜகான்பூரிலிருந்து நாளை காலை 11 மணிக்கு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பைத் தொடங்கி, ஜெய்ப்பூர்-டெல்லி பிரதான சாலையை மறித்துப் போராட்டம் நடத்துவார்கள்" எனவும் அறிவித்துள்ளனர்.