தன்னுடைய வீட்டில் திருடிய நபரிடம், இதுபோல் எல்லாம் திருடக்கூடாது என அன்பாக அறிவுறைகூறும் ஆசிரியரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே வசிப்பவர் ஆசிரியர் முத்துலட்சுமி. கணவரை இழந்த முத்துலட்சுமி தனது இரு மகள்களுடன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஆசிரியர் முத்துலட்சுமி வீட்டில் புகுந்த நபர் பணம் மற்றும் நகைகளைத் திருடியுள்ளார். இது குறித்து முத்துலட்சுமி போலீஸுக்கு புகார் அளிக்க விசாரணையில் கல்லூர் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்ற நபரைக் கைது செய்தனர். பின்னர் சம்பவ நடந்த இடத்திற்கு இஸ்மாயிலை போலீசார் அழைத்து வந்து விசாரித்த போது, ஆசிரியர் முத்துலட்சுமி, அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.
“நான் எல்கேஜி மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகிற ஆசிரியர். என்னுடைய இந்த 38 வருடங்களில் பெற்றோர், கணவர், அனைவரையும் இழந்து சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். தற்போதுதான் எனது மகள் பட்டப்படிப்பு முடித்து அவளுக்கு வேலையும் கிடைத்துள்ளது. தினம் தினம் சம்பாதித்து வாழ்ந்து வருகிறோம். எல்லார் வீட்டிலும் இந்த நிலைதான் உள்ளது, என்னுடைய மகன் போல் இருக்கிறார்; இதனை மனதில் வைத்துக்கொள்” என்று அன்பாக அறிவுரை கூறினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து பலரும் பகிர்ந்து வருகின்றனர்.