அயோத்தி நிலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ராமர் கோயில் கட்டுவதற்காக நிதி அளித்தவர்களைப் பாராட்டும் விதமாக பாஜக, நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
அவ்விழாவில் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 1992 ஆம் ஆண்டு வரலாற்றுப் பிழை நீக்கப்பட்டது எனக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் “பாபர் போன்ற வெளிநாட்டுப் படையெடுப்பாளர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை அழிக்க அவர் ஏன் தேர்வு செய்தார்? ஏனென்றால், நாட்டின் உயிர் சக்தி அங்கு தங்கியிருப்பதை அவர் புரிந்துகொண்டார். ஒரு இரவுக்கு முன்பு நாங்கள் அங்கு தூங்கிக் கொண்டிருந்தோம். (பாபர் மசூதியின்) மூன்று மாடங்கள் தெரிந்தன. அடுத்தநாள் ஒரு வரலாற்றுத் தவறு எப்படி நீக்கப்பட்டது என்பதை உலகம் கண்டது எனக் கூறியுள்ளார்.
மேலும் பிரகாஷ் ஜவடேகர், பாபர் மசூதி ஒரு மசூதி அல்ல, ஏனெனில் அங்கு எந்த வழிபாடும் நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். பிரகாஷ் ஜவடேகரின் கருத்து, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்ட பின்னர், மத்திய அமைச்சரே கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறுவதற்குக் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்தநிலையில், மத்திய அமைச்சரின் கருத்துக்கு ஒவைஸி கண்டனம் தெரிவித்துள்ளார். பிரகாஷ் ஜவடேகரின் பேச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "கோயில் இடிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், மசூதி இடித்தது சட்ட விதிமீறல் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மசூதியை இடிப்பதற்காக சதி செய்யவில்லை என்று சிபிஐ நீதிமன்றம் கூறுகிறது. இதை ஏன் பெருமையுடன் நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்ளவில்லை? வெட்கக்கேடானது" எனக் கூறியுள்ளார்.