சென்னையைச் சேர்ந்தவர் 20 வயதான அமிர்தவர்ஷிணி. இவர் டெல்லியில் தேசிய சட்டப் பல்கலைகழகத்தில் எல்.எல்.பி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி அமிர்தவர்ஷிணி கடந்த செவ்வாய்க்கிழமை(3.8.2024) அன்று விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவியின் அறையில் சோதனை நடத்தியபோது அமிர்தவர்ஷிணி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், எனது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல, இந்த முடிவை எடுத்ததற்கு என்னைப் பெற்றோர் மன்னித்துவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய ஏ.டி.எஸ்.பி நிஷாந்த் குப்தா, “மாணவி தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். கடந்த ஏப்ரல் மாதம் மாணவி அமிர்தவர்ஷிணி தனக்குத் தற்கொலை பற்றி எண்ணங்கள் அடிக்கடி வருவதாக அவரது தோழியிடம் கூறியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து அவரது தோழிகள் இதுகுறித்து அமிர்தவர்ஷிணியின் பெற்றோருக்கு தெரியப்படுத்த, உடனே அவரது பெற்றோர்கள் அமிர்தவர்ஷிணியை சென்னைக்கு ஒரு வாரம் அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில்தான் தற்போது அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.