தமிழகம் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் பகுதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதி. பன்னாரியிலிருந்து மலைப்பாதை தொடங்குகிறது. 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலத்திற்கு பயணிகள் மற்றும் சரக்கு வாகனப் போக்குவரத்து நாள் முழுக்க 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது. தமிழகம் கர்நாடகம் எல்லையில், கர்நாடகா மாநில சோதனைச்சாவடி புளிஞ்சூரில் உள்ளது. இந்தச் சோதனைச் சாவடியிலிருந்து கர்நாடகா செல்லும் சாலை முழக்க குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் தமிழகத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலத்திற்கு சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் அவ்வப்போது மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை கர்நாடகாவில் இருந்து தேங்காய் மட்டை பாரம் ஏற்றிவந்த ஒரு லாரி புளிஞ்சூர் சோதனைச் சாவடி அருகே உள்ள பள்ளத்தில் அப்படியே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் சாலையில் எந்த வாகனமும் செல்ல முடியாமல் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலம் இடையே பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மலைப்பாதையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதற்கிடையே தாளவாடி, ஆசனூர், திம்பம் மலைப்பகுதியில் நேற்று முதல் கனமழை பெய்தது. இதன் காரணமாக சத்தியமங்கலம் பண்ணாரி செல்லும் சாலையில் உள்ள குய்யனூர் என்ற பகுதியில் இருக்கும் தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தால் இரண்டாக உடைந்தது.
இதனால் பண்ணாரியில் இருந்து சத்தியமங்கலம் வழியாக இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்தத் தரைப்பாலம் உடைந்ததால் சுமார் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் பல மணி நேரம் போராடி, தற்காலிகமாக மாற்றுப் பாதை அமைத்தனர். மொத்தத்தில் லாரி கவிழ்ந்ததாலும், பாலம் உடைந்ததாலும் ஒரு நாள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.