உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த 12ஆம் தேதி (12/11/2023) காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 150 மீட்டர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்தது.
மீட்புப் பணிகளில் 11வது நாளாகத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு முதல் முறையாகச் சூடான உணவு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. அதன்படி, அங்கு சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கு கிச்சடி, டால் உள்ளிட்ட உணவு வகைகள் தரப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கிடைமட்டாக குழாய்கள் பாதிக்கப்பட்டு அதன் மூலம் தொழிலார்களை மீட்கும் பணி துவங்கியுள்ளது. இதனால் இன்னும் சற்று நேரத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மீட்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் பாறை மற்றும் மண் சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு ஆக்சிஜன் கிடைக்க உதவியுள்ளது. திருச்செங்கோடு பி.ஆர்.டி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பி.ஆர்.டி.ஜி-5 ரிக் இயந்திரமும் இந்த மீட்புப் பணியில் பங்களித்துள்ளது. மீட்புக்குழு அணுகியதை தொடர்ந்து பி.ஆர்.டி நிறுவனம் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.