தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே அமைந்துள்ளது கஜ்ஜிபவுலி. இப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்தவர் ஷேக் அக்மல் சுபியான். 24 வயதான ஷேக் அக்மல் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பணி செய்வதற்கு ஏதுவாக வேலை செய்யும் ஐடி நிறுவனம் அருகிலேயே தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி விடுமுறை என்பதால் ஷேக் அக்மல் விடுதி அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தேவையானதை வாங்கி முடித்தவர் மீண்டும் தனது விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த விடுதியின் கேட் அருகே தண்ணீர் தொட்டி திறந்து கிடந்துள்ளது. ஆனால், அதனைக் கவனிக்காமல் சென்ற ஷேக் அக்மல், விடுதி வாசல் அருகே திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டில் தவறி விழுந்துள்ளார். நொடி பொழுதில் எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் விழுந்த வேகத்தில் ஷேக் அக்மல் சுபியானின் முக நாடிப் பகுதி தண்ணீர் தொட்டியின் கான்கீரிட் மீது பலமாக மோதி உடைந்தது. அதில், ரத்தம் கொட்டி மயக்க நிலையில் அவர் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை யாரும் கவனிக்காத நிலையில், இளைஞர் கீழே விழுந்த சத்தம் வீட்டின் உள்ளே இருந்த சிறுவனுக்கு மட்டும் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட அந்தச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு விடுதி பொறுப்பாளரிடம் கூறுயுள்ளார். அப்போது, விடுதி வாசலுக்கு வந்தவர், திறந்துக்கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் யாரேனும் உள்ளனரா எனத் தேடிப்பார்த்துள்ளார்.
ஆனால், யாரும் தென்படாத நிலையில், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள அவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அங்கிருந்தவர்களும் தங்களது பணிகளை மேற்கொள்ள சென்றுவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாலை நேரத்தில் ஷேக் அக்மல் காணவில்லை என்ற தகவல் விடுதி காப்பாளருக்குச் சென்றுள்ளது. அவர், விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் தெரிய வந்தது. கடைசியாக கடைக்குச் சென்று திரும்பிய ஷேக் அக்மல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காட்சிகள் சிசிடிசியில் பதிவிவாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்து போன விடுதி காப்பாளர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த ஷேக் அக்மலினை மீட்டனர். ஆனால், அவர் இறுதியில் சடலமாகவே மீட்கப்பட்டார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷேக் அக்மல் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதனிடையே, ஷேக் அக்மல் தவறி விழும் சிசிடிசி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஷேக் அக்மல் தவறி விழுவதும், உடனே சத்தம் கேட்டு குழந்தை விடுதி பொறுப்பாளரை எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், விடுதி பொறுப்பாளர் தேடிப்பார்த்தும் யாரும் உள்ளே விழுந்தது போல தெரியாததால் அவர் மற்ற பணிகளைச் செய்வதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கிய போலீசார் அஜாக்கிரதையாக தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.