நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் சிஜூ. தமிழக கேரள எல்லையில் இருக்கக்கூடிய எருமாடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் தலைமைக் காவலர் சிஜூ அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள வனப்பகுதிக்குள் நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் தலைமைக் காவலர் சிஜூவின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. கேரள வனத்துறையினர் எப்பொழுதும்போல அந்த பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்க கண்காணிப்பு கேமராவை பரிசோதித்து பார்த்தபோது, அதில் சிஜூ மற்றும் அவரது நண்பர்கள் நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்கு வந்திருந்த காட்சிகள் பதிவாகியிருந்தது.
இதுதொடர்பாக கேரள வனத்துறை விசாரணை மேற்கொண்டதில் வேட்டையில் ஈடுபட்டது தமிழகத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் என்பதை அறிந்துகொண்ட கேரள வனத்துறை, இதுதொடர்பாக மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வேட்டையில் ஈடுபட்ட தலைமைக் காவலரை கோவை மாவட்ட எஸ்.பி சஸ்பெண்ட் செய்தார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த சிஜூ இன்று கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் சரணடைந்துள்ளார்.