நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் 175 தொகுதிகளைக் கொண்ட ஆந்திரமாநில சட்டமன்ற தேர்தலில் 164 தொகுதிகளில் வெற்றிபெற்று ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கூட்டணி வீழ்த்தி அமோக வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் கூட்டணியில் பாஜகவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இடம் பெற்றிருந்தது. தொடர்ந்து ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4 முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள கேசரபள்ளி ஐ.டி. பூங்கா அருகே நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மேலும், ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “நான்காவது முறையாக ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவியேற்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் தலைமை மாநிலத்திற்கு செழிப்பையும் நலனையும் கொண்டு வரட்டும். இரு மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு இடையேயான பிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.