மத்திய அரசுக்கு பொருளாதாரம் தொடர்பான ஆலோசனை வழங்கி, வழிநடத்தும் மிக முக்கிய பதவியில் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த கே.வி.சுப்பிரமணியன், கடந்த டிசம்பர் மாதம் பதவியில் இருந்து விலகி இருந்த நிலையில், அந்த இடத்திற்கு அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (29/01/2022) பதவியேற்க உள்ள அனந்த நாகேஸ்வரன் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி வகிப்பார்.
2022- 2023 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை வரும் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அனந்த நாகேஸ்வரன் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பதவியில் நியமிக்கும் முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
அகமதாபாத் ஐ.ஐ.எம். முதுநிலை பட்டதாரியான அனந்த நாகேஸ்வரன், பல புகழ்பெற்ற சர்வதேச பொருளாதார அமைப்புகளில் முக்கிய பதவி வகித்துள்ளார். உலகெங்கும் பொருளாதாரத்தின் போக்கை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
பொருளாதார நிபுணர், பேராசிரியர், புத்தக ஆசிரியர், ஆலோசகர் என பன்முகத்தன்மை கொண்ட 60 வயதான அனந்த நாகேஸ்வரன் மதுரை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். இதற்கு முன் தலைமை பொருளாதார ஆலோசகர்களாக இருந்த ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், கே.சுப்பிரமணியன் ஆகியோரும் தமிழ்நாட்டைப பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அனந்த நாகேஸ்வரனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் தமிழர்களின் பெருமைமிகு பட்டியலில் இணையும் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகரான முனைவர் வி.அனந்த நாகேஸ்வரனுக்கு தமிழர்கள் அனைவரோடும் சேர்ந்து எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.