தீவிர வைரஸ் நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் அசாம் மாநிலத்தில் தீவிரமடைந்து வருகிறது.
பன்றிகளைத் தாக்கும் ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் இதுவரை இந்தியாவுக்கு வந்திராத நிலையில், தற்போது முதன்முதலாக இதன் பாதிப்பு அசாம் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் இந்த வைரசால் இதுவரை 300 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 13,000 பன்றிகள் உயிரிழந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் பரவிய இந்த வைரஸ், எல்லைப் பகுதியான அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியா வந்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இது அதிவேகமாகப் பரவும் வைரஸ் என்பதால், இதைத் தடுக்கும் நடவடிக்கைகள் அம்மாநிலத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த நோய்த் தாக்கினால் பன்றிகள் இறப்பது 100 சதவீதம் உறுதியாகும். ஆதலால், மற்ற பன்றிகளை நோய்த் தாக்காமல் காப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 10,000 பன்றிகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸால் மனிதர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்றாலும், பன்றி வளர்ப்பவர்கள் மத்தியில் இது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.