கேரள தங்கம் கடத்தல் சம்பவத்தில் கார்கோ விமானத்தில் காய்கறிகள் கொண்டு செல்லும் கண்டெய்னர்கள் மூலம் பணம் மற்றும் நகை கடத்தப்பட்டதாக ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தங்கக்கடத்தல் விவகாரம் கேரளா அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கம் அண்மையில் பிடிபட்டது. இந்தக் கடத்தல் விவகாரத்தில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் மற்றும் அவரது மனைவி, தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், ரமீஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ. முடுக்கிவிட்டுள்ள நிலையில், இவ்வழக்கின் மற்றொரு முக்கியக் குற்றவாளியான பைசல் ஃபரீத் கடந்த வாரம் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த விசாரணை முடிவடைந்து ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார். இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவருடன் கைதுசெய்யப்பட்ட சந்தீப் நாயர் ஆகியோர் அடுத்த மாதம் 21-ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷிடம் என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உதவியுடன் கார்கோ விமானத்தில் காய்கறிகள் கொண்டு செல்லும் கண்டெய்னர்கள் மூலம் பணம் மற்றும் நகை கடத்தப்பட்டதாக ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.