குஜராத் மாநிலத்தின் சூரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இதனால் தினக்கூலிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் வெளி மாநிலங்களில் தங்கி பணிபுரிந்துவரும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தொடர்ந்து பல நாட்களாக வருமானம் ஏதும் இல்லாத காரணத்தால், தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முயன்று வருகின்றனர். இதில் பலர் நடைப்பயணமாகவும், சைக்கிள்களிலும் பல நூறு கிலோமீட்டர்கள் கடந்து ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் சூரத்தில் தங்கி பணிபுரிந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என வலியுறுத்தி சாலைகளில் குவிந்தனர். இதனையடுத்து அங்கு வந்த காவத்துறையினர் மக்களை கலைந்துசெல்ல வலியுறுத்தினார். ஆனால் தொழிலாளர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து சாலையில் நின்றிருந்தனர். அப்போது திடீரென அங்கிருந்த மக்களுக்கும், காவல் துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டு கூட்டத்தைக் கலைக்க போலீசார் முயற்சித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவிவருகிறது.