நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான ‘அசோசியேடட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வெறும் ரூ.50 லட்சம் கொடுத்து ‘யங் இந்தியா’ நிறுவனத்தின் மூலம் பெற்றதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாய் சோனியா காந்தி, காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா, பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோருக்கு எதிராக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் 2011-12 ஆம் ஆண்டு வருமான வரி கணக்குகளை மறுஆய்வு செய்ய அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து சோனியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றமும் வருமானவரி கணக்குகளை மறு ஆய்வு செய்ய அனுமதியளித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.