டீசல் மீதான வாட் வரியை 30 சதவீதத்திலிருந்து 16.75 சதவீதமாக குறைக்க டெல்லி அமைச்சரவை முடிவு செய்துள்ளதையடுத்து, டெல்லியில் டீசல் விலை ரூ .82 -ல் இருந்து ரூ .73.64 ஆக குறைந்துள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. காணொளிக்காட்சி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "பொருளாதாரத்தை புதுப்பிப்பது ஒரு கடுமையான சவாலாக இருக்கும், ஆனால் அது மக்களின் ஒத்துழைப்புடன் செய்யப்பட வேண்டும். டெல்லியின் பொருளாதாரத்தை முன்னேற்ற உதவும் வகையில், டீசல் விலையைக் குறைக்க நகர வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கோரியுள்ளனர். எனவே டீசல் மீதான வாட் வரியை 30 சதவீதத்திலிருந்து 16.75 சதவீதமாகக் குறைக்க டெல்லி அமைச்சரவை முடிவு செய்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து டெல்லியில் டீசல் விலை ரூ .82 -ல் இருந்து ரூ .73.64 ஆக குறைந்துள்ளது. டெல்லி அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.