Published on 15/04/2019 | Edited on 15/04/2019
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி நாடு முழுவதும் விறுவிறுப்பாக பிரச்சார கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது இதுவரை இல்லாத அளவுக்கு சாதிய மற்றும் மத ரீதியிலான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சாதி, மதத்தை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசும் அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.