
18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.
இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.