இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கர்நாடகாவிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் சாமராஜநகர் மாவட்ட மருத்துவமனையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் 24 உயிர்கள் பறிபோயின. இந்தநிலையில், கர்நாடக மாநிலத்தில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த வழக்கை விசாரித்த அம்மாநில உயர் நீதிமன்றம், கர்நாடகாவிற்கு தினசரி ஒதுக்கப்படும் ஆக்சிஜன் அளவை 965 மெட்ரிக் டன்னிலிருந்து 1,200 மெட்ரிக் டன்னாக உயர்த்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், இதனை ஏற்க மறுத்த மத்திய அரசு, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு துல்லியமாக அளவிடப்பட்ட, நன்கு ஆலோசிக்கப்பட்ட சட்டபூர்வமான உத்தரவாகும். மத்திய அரசின் மேல்முறையீட்டை ஏற்க எந்தக் காரணமும் இல்லை" என தெரிவித்தது. மேலும், கர்நாடக குடிமக்களை நாங்கள் ஒதுக்கிவிட மாட்டோம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த விசாரணையின்போது மத்திய அரசு வழக்கறிஞர், "அனைத்து மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. எனது கவலை உயர் நீதிமன்றங்கள் ஆக்சிஜன் ஒதுக்குவதுதான். எல்லா உயர் நீதிமன்றங்களும் ஆக்சிஜனை ஒதுக்க ஆரம்பித்தால் அது பிரச்சினையாகிவிடும்" என்றார்.
ஆனால், இதனை ஏற்காத உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, பொறுப்பற்றதானது அல்ல என்றும், 3.95 லட்சம் கரோனா பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டுள்ள கர்நாடகா, 1,700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மட்டுமே கேட்கிறது. அதன் குறைந்தபட்ச தேவையே 1,100 மெட்ரிக் டன் என தெரிவித்தது. மேலும் உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.