சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்திருந்தது.
அதனை தொடர்ந்து, தனக்கு ஜாமீன் கொடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில், ‘பிணை கோர வழிமுறை உள்ளது’ என வாதங்களை தொடங்கியபோது நீதிபதிகள் குறுக்கிட்டு கேள்வி எழுப்பினர்.
அதில் அவர்கள், “செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்ற ஆவணங்கள் எங்கே?. பென்டிரைவ் போன்றவற்றில் தனது பங்கு இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறதே?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத்துறை சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், ‘பென்டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என்று செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது’ எனக் கூறினர்.
அதற்கு நீதிபதிகள், ‘நாங்கள் கேட்பது மிக சாதாரண கேள்வி. நேரடியாக கேட்கப்படும் சாதாரண கேள்விக்குக் கூட அமலாக்கத்துறையிடம் இருந்து பதில் இல்லை. இன்று பதில் இல்லையென்றால் நாளை பதிலோடு வாருங்கள்’ என்று கூறி வழக்கை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.