ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, கரோனா தடுப்பூசி மருந்துகள், மருத்துவமனைகளின் படுக்கை வசதிகள் போன்றவை பற்றி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக இன்று (27/04/2021) மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, 'தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள் ஆக்சிஜன் கையிருப்பை வெற்றிக்கரமாக கையாள்கின்றன. ஆக்சிஜன் பிரச்சனை என்பது நாடு சார்ந்த பிரச்சனை' என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு, 'ஆக்சிஜன் உள்ளிட்ட விவகாரங்களை உயர்நீதிமன்றங்கள் விசாரிப்பதையே விரும்புகிறோம். உயர்நீதிமன்றங்கள் விசாரித்தாலும் நாங்களும் மவுனமாக இருப்பதை விரும்பவில்லை. உயர்நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்கு வராத விவகாரங்களை நாங்கள் விசாரிக்கிறோம். தேசிய அளவிலான பிரச்சனைகளை முன்னின்று விசாரிக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பு. ராணுவத்தின் வசம் உள்ள மருத்துவ வசதிகள் முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி அமர்வு, இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா, ஜெய்தீப் குப்தா ஆகியோரை நியமித்து உத்தரவிட்டனர்.
மேலும், கரோனா இரண்டாம் அலையில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், ஆக்சிஜன் விநியோகம், ரெம்டெசிவிர் கையிருப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவை குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 30- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.