அரசு மருத்துவமனை அதிகாரிகளாக இரண்டு திருநங்கைகள் பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளனர்.
திருநங்கைகளான டாக்டர் ரூத் ஜான் மற்றும் டாக்டர் ப்ராச்சி ரத்தோர் ஆகியோர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒஸ்மானியா மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருநங்கைகள், சமூகத்தில் சமநீதி கேட்டு போராடும் சூழ்நிலையில் இந்தப் பணி நியமனம் திருநர் சமூகத்தின் சமநீதி போராட்ட வரலாற்றில் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
2018ல் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த ரூத் தற்போது தான் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “எனக்கும் என் சமூகத்திற்கும் இது மிகப்பெரிய விஷயம். நான் இதை உண்மையாகவே எதிர்பார்க்கவில்லை. நான் பட்டம் பெற்ற பின் தற்போது வரை நிராகரிக்கப்பட்டுள்ளேன்” என்றார்.
மறுபுறம் டாக்டர் ப்ராச்சி பட்டம் பெற்ற உடன் தனியார் மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். எனினும் எந்த மருத்துவமனையிலும் அவர் அதிக காலம் பணிபுரியவில்லை. சில நாட்களிலேயே பணியில் இருந்து விடுபடுமாறு கூறுவதால் எந்த மருத்துவமனையிலும் அதிக காலம் பணிபுரியவில்லை என ப்ராச்சி கூறியுள்ளார்.