பீமா கோரேகான் வழக்கில் சிறையில் உள்ள கவிஞரும், சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சிறையில் உள்ள வரவர ராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய மும்பை உயர்நீதிமன்றம், ஜாமீன் நீட்டிப்பு வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், 82 வயதாகும் அவருக்கு பார்க்கின்சன் நோய் தீவிரமடைந்திருப்பதால், நிரந்தர ஜாமீன் வழங்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவ காரணங்களுக்காக வரவர ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கிரேட்டர் மும்பையை விட்டு வெளியேற கூடாது; சாட்சிகளைக் கலைக்க முயற்சிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராட்டியர்களுக்கு எதிரான போரின் 200வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி, கடந்த 2018- ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது, பீமா கோரேகானில் வன்முறை வெடித்தது தொடர்பான வழக்கில் வரவர ராவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.