நாட்டில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அதிகளவு புல்டோசர் கலாச்சாரம் நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசம், குஜராத், அசாம், ராஜஸ்தான் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பு வீடுகளை உடனுக்குடன் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. முக்கியமாக, இந்த புல்டோசர் கலாச்சார நடவடிக்கை சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தான் அதிகளவில் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பான புகார் மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் ஆகிறது. இது தொடர்பான வழக்குகள் குறித்த விசாரணையில், இந்த புல்டோசர் நடவடிக்கைக்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றம் இடைக்கால தடை வித்து உத்தரவிட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை இன்றுடன் முடிவடையும் நிலையில், புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்குகள் மீண்டும் இன்று பி ஆர்.காவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட அரசுகள் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், ‘இடிக்கப்படும் வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே இது குறித்து நோட்டீஸ் வழங்கப்படுகிறது. தண்டனைக்குரிய நடவடிக்கையாக இடிப்புகளைப் பயன்படுத்துவதற்கான மனுதாரர்களின் புகார்கள், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட உண்மையான இடிப்புகளில் 2% க்கும் குறைவானது” என்று வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “நாம் ஒரு மதச்சார்பற்ற நாடு. எங்களது பேச்சு, மதம் அல்லது சமூகத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இருக்கும். சாலையின் நடுவில் ஏதேனும் மதக் கட்டமைப்பு இருக்குமாயின், அது குருத்வாரா (சீக்கியர்களின் புனித கோயில்) ஆக இருந்தாலும், அல்லது தர்காவாக இருந்தாலும் அல்லது கோவிலாக இருந்தாலும், அது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. பொதுமக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. புல்டோசர் நடவடிக்கைகளின் போது, அவர்கள் பின்பற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடிமக்களுக்கும் இருக்க வேண்டும். சட்டம் என்பது எல்லோருக்கும் ஒன்று தான்” என்று தெரிவித்தனர்.