இந்தியாவில் கரோனா பரவல் கையாளப்படுதல் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையில், மத்திய அரசை விமர்சித்துள்ள உச்சநீதிமன்றம், பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. 18-44 வயதானவர்களுக்கான தடுப்பூசிக்குக் கட்டணம் என்ற மத்திய அரசின் கொள்கை, தனிச்சையானது மற்றும் தெளிவான சிந்தனையற்றது எனக் கூறிய உச்சநீதிமன்றம், நிர்வாகக் கொள்கைகளால் குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகள் மீறப்படும்போது, நீதிமன்றங்கள் அமைதியான பார்வையாளராக இருப்பதை நமது அரசியலமைப்பு அனுமதிக்காது எனத் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, தடுப்பூசிகளை வாங்குவதற்காக யூனியன் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 35,000 கோடி இதுவரை எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்பதையும், 18-44 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கு அந்த 35 ஆயிரம் கோடியை ஏன் பயன்படுத்த முடியாது என்பதையும் தெளிவுபடுத்துமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுவரை கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் v ஆகிய தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பான தரவுகள், தடுப்பூசி கொள்முதலுக்காகத் தரப்பட்ட ஆர்டர்களின் தேதிகள் ஆகிய விவரங்களையும், இதுவரை எத்தனை டோஸ்களுக்கு ஆர்டர் தரப்பட்டுள்ளது. அவை எப்போது கிடைக்கும் உள்ளிட்டவை அடங்கிய விவரங்களையும் சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தாண்டு டிசம்பர் 31 தேதிவரை தடுப்பூசி எவ்வாறு கிடைக்கும் என்பது குறித்துத் தெரிவிக்கவும், கருப்பு பூஞ்சைக்கான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்குமாறும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதவிர, மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் தடுப்பூசிகள் இலவசமாகப் போடப்படுகிறதா என்பது குறித்து அந்தந்த மாநில/ யூனியன் பிரதேச அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.