இந்தியா இழந்த அதன் நிலப்பகுதியை மீட்காவிட்டால் அது தற்கொலைக்குச் சமம் என பா.ஜ.க. மூத்ததலைவர் சுப்ரமணியன் ஸ்வாமி தெரிவித்துள்ளார்.
லடாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலால், இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த மோதலில், இரு தரப்பிலும் ராணுவ வீரர்களில் உயிரிழந்துள்ள நிலையில், இந்தப் பிரச்சனையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாகச் சீனா தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து காணொளிக்காட்சி மூலமாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுப்ரமணியன் சுவாமி, " கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய வீரர்கள் எல்லை தாண்டி வந்தார்கள் என்று சீனா கூறுவது பொய். உண்மையில் சீன ராணுவ வீரர்கள் தான் எல்லையைக் கடந்து இந்தியப் பகுதிக்குள் வந்து நம் வீரர்களைச் சீண்டியுள்ளனர். நம்முடைய வீரர்கள் எல்லை மீறி ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டார்களா என்ற கேள்விக்கே இடமில்லை. சீனா ஆக்கிரமித்துள்ள நமது நிலப்பகுதியை இந்தியா மீட்டெடுக்க வேண்டும்.
என்னுடைய கட்சியின் மனநிலை என்ன என்பது பற்றியும், அவர்கள் எந்த அடிப்படையில் ஆட்சிக்கு வந்தார்கள் என்பது பற்றியும் எனக்குத் தெரியும். என்ன விலைகொடுத்தாலும் அந்தநிலத்தை மீட்க வேண்டும். இழந்த நிலப்பகுதியை மீட்காவிட்டால் அது தற்கொலைக்குச் சமம். சீனாவுடன் நாம் ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபடுவதெல்லாம் பயன் அளிக்காது. இந்திய மக்களும், பிரதமர் மோடியும் பொறுமையாக இருக்கமாட்டார்கள். இந்த புதிய நிலைப்பாட்டை மோடி ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆதலால், நாம் போருக்குப் போகப்போகிறோம், அது குறிப்பிட்ட இலக்கை நோக்கிய போராக இருக்கலாம். கடந்த 1962-ஆம் ஆண்டு போன்ற சூழல் இப்போது இல்லை. கடந்த 1962-ஆம் ஆண்டில் இருந்ததைப் போன்று இந்தியர்கள் மென்மையாக இருப்பார்கள் என்று சீனா நினைத்துவிடக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.