இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மக்களுக்கு முழு வீச்சில் செலுத்தப்பட்டுவருகின்றன. பொதுவாக தடுப்பூசிகள் மூன்று கட்டங்களாக சோதனை செய்யப்படும். இந்த மூன்றுகட்ட சோதனை தரவுகளை வைத்தே தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், மூன்றாவது கட்ட சோதனையின் தரவுகள் இன்றியே கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டது.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சமீபத்தில் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றவது கட்ட சோதனை தரவுகள் ஜூலையில் வெளியிடப்படும் என அத்தடுப்பூசியைத் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் கோவாக்சினின் மூன்றாவது கட்ட சோதனை தரவுகளை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் சமர்ப்பித்துவிட்டதாகவும், தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரின் நிபுணர் குழு, இன்று (22.06.2021) கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனை தரவுகளை ஆய்வு செய்யப்போவதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நிபுணர் குழு ஆய்வுக்குப் பிறகு, கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனை முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும், உலக சுகாதார நிறுவனத்துக்கும் இடையே தடுப்பூசி சமர்ப்பித்தலுக்கு முந்தைய கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், மூன்றாவது கட்ட சோதனை தரவுகளை இந்தியா ஆய்வுசெய்வது கவனிக்கத்தக்கது. பாரத் பயோடெக் நிறுவனத்துடனான நாளைய கூட்டத்திற்குப் பிறகு, உலக சுகாதார நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை ஆய்வுசெய்து அவசரகால அனுமதி அளிப்பது தொடர்பாக முடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.