வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இரண்டு நாட்களுக்கு அந்தமான் நிக்கோபர் பகுதிகளில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்கு ரெட் அலெர்ட் விடப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்தமான் நிக்கோபர் தீவிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதாகவும், அடுத்த 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர்ந்து மியான்மர் நோக்கிச் செல்லும். எனவே அந்தமான், மத்திய கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரம் தமிழகத்தில் வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாகப் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.