Skip to main content

இலவச கரோனா தடுப்பூசிகளால் பெட்ரோல் விலை உயர்வு - மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர்!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

mos petroleum

 

இந்தியாவில்  பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்துள்ளது. இந்த நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவதே காரணம் எனத் தெரிவித்துள்ளார். 

 

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், இதுதொடர்பாக கூறியதாவது; பெட்ரோல் ஒன்றும் விலை உயர்வானது அல்ல. மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோலுக்கு வரி விதித்துள்ளன. நீங்கள் கரோனா தடுப்பூசிகளை இலவசமாகப் பெறுகிறீர்கள். கரோனா தடுப்பூசிகளுக்கான பணம் எங்கிருந்து வரும்? நீங்கள் தடுப்பூசிகளுக்குப் பணம் செலுத்துவதில்லை. தடுப்பூசிகளுக்கான விலை இந்த வரிகளிலிருந்து வருகிறது.

 

நமது அரசு 130 கோடி மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு தடுப்பூசியின் விலை சுமார் 1,200 ரூபாய். ஒவ்வொரு நபருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 40 ரூபாய்தான். மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோலுக்கு வரி விதித்துள்ளன. நாட்டில் குறைந்தபட்ச மதிப்பு கூட்டப்பட்ட வரி விதித்துள்ள ஒரே மாநிலம் அசாம் தான். பெட்ரோல் மீது அந்த மாநிலமானது 28 ரூபாயை மதிப்பு கூட்டு வரியாக விதித்துள்ளது. எங்கள் அமைச்சகம் (மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை) 30 ரூபாயை வரியாக விதித்துள்ளது.

 

நீங்கள் இமயமலை நீரைக் குடிக்க விரும்பினால், ஒரு பாட்டிலுக்கு ரூ .100 ஐ செலுத்த வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது பெட்ரோல், டீசல் விலை தானாகவே உயரும். எங்கள் அமைச்சகம் எண்ணெய் பொருட்களின் விலையை நிர்ணயிக்கவில்லை. வர்த்தக துறை அதை நிர்ணயிக்கிறது. நிர்ணயிக்கப்படும் விலை சர்வதேச சந்தையுடன் தொடர்புடையது. அண்மையில் எங்களது அமைச்சகத்தின் நிதி கரோனா சூழ்நிலையை சமாளிக்க சுகாதாரத்துறை அமைச்சகத்திற்குத்  திருப்பிவிடப்பட்டது. 

இவ்வாறு ராமேஸ்வர் தெலி தெரிவித்தார். 

 

மேலும் அந்த நிகழ்ச்சியில் பேசிய அசாம் மாநில பாஜக தலைவர், ஒரு மோட்டர் சைக்கிளில் மூன்று பேர் செல்ல வேண்டும் எனவும், மக்கள் நடக்க பழக வேண்டும் எனவும் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்